400. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் - TPV1
இது ஒரு மீள்பதிவு, சென்ற ஆண்டு மார்கழி மாதத்தில் எழுதிய இடுகை.
******************************************************************
திருப்பாவையுடன் எனது நானூறாவது பதிவு !
சென்ற வருடம் மார்கழி மாதத்தின் போது ஒரு சில திருப்பாவை பாசுரங்களுக்கு பொருள் விளக்கத்தையும், சிறப்பையும் எனது திருப்பாவைப் பதிவுகளில் எழுதியிருந்தேன்.
விட்டுப்போன பாசுரங்களுக்கு, பொருள் விளக்கத்தையும், சிறப்பையும் எடுத்துச் சொல்லும் பதிவுகளை இந்த மார்கழி மாதம் இட உத்தேசம். திருப்பாவையின் முதல் பாடலிலிருந்து ஆரம்பிக்கிறேன். அதற்கு முன் மார்கழி பற்றியும், பாவை நோன்பு குறித்தும் ஒரு சிறிய முன்னுரை !மார்கழி, பன்னிரண்டு தமிழ் மாதங்களில் ஒரு மாதம். 'மாரி' என்ற வார்த்தையிலிருந்து உண்டானது 'மார்' என்பது. 'மாரி' என்றால் மழை என்று பொருள். 'கழி' என்றால் 'கழிந்த' அல்லது 'பின்னர்' என்று அர்த்தம். எனவே, மழைகாலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள்.
மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், 'மார்கழி நோன்பு' ஆகும். ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு நலத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப் பெண்களால் நோற்கப்படுவதால் 'பாவை நோன்பு' என்றும் கூறப்படுகின்றது. கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித் துதித்து வழிபட்டனர்.தான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயினும், தன்னை கோகுலத்திலுள்ள கோபியராகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, 'பாவை நோன்பு' நோற்ற சமயம் சூடிக் கொடுத்த நாச்சியார் பாடிய முப்பது பாடல்களே 'திருப்பாவை'.
'திருப்பாவை' யும் (திருமால் மீது பாடப்பட்ட பாடல்கள்), மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய 'திருவெம்பாவை' யும் பாவைப் பாட்டுக்களில் சிறந்தவை. திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டது. திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் 'திருப்பள்ளியெழுச்சி' யிலுள்ள பத்து பாடல்களும் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழி மாத முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது. இப்பாடல்களில் பக்திப் பெருக்கும், தன்னலமற்ற இறைசேவை ஆகியவை தவிர வேறு நோக்கம் எதுவும் இல்லாமலிருப்பதையும் காணலாம்.
நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்
மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோரெம்பாவாய்.
"அழகிய ஆபரணங்களை அணிந்த கன்னிப் பெண்களே! வளமும் சிறப்பும் மிக்க ஆயர்பாடியில் உள்ள செல்வச் சிறுமியரே! மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில், முழு நிலவு வீசும் பௌர்ணமி நன்னாளில், பாவை நோன்பில் கலந்து கொண்டு நீராட விரும்புகின்றவர்கள், வாருங்கள், போகலாம்!
கூர்மையான வேலைக் கொண்டு பகைவர்க்கு கொடுமை செய்பவனாகிய நந்தகோபனுடைய குமாரனும், அழகிய விரிந்த விழிகளை உடைய யசோதைக்கு இளம் சிங்கக்குட்டி போன்றவனும், கரிய வண்ண மேனியனும், செந்தாமரை போன்ற கண்களையும், சூரியனைப்போல பிரகாசமாயும் நிலவைப்போல குளிர்ந்ததாயும் உள்ள திருமுகத்தையும், உடையவனும், ஆன நாராயணன், நம் நோன்புக்கு வேண்டிய பொருட்களையும், நாம் விரும்பிய வரங்களையும் தந்து அருள் புரிவான். எனவே உலகத்தார் நம்மை போற்றும் வண்ணம், நோன்பிருந்து அவன் திருவடி பணிவோம், வாருங்கள்!"
பாசுர விசேஷம்:
1. அடியவர், தனக்கும் எம்பெருமானுக்கும் ஆன உறவை உணரும் நாள் "நன்னாள்" என்று போற்றப்படுகிறது! "நீராடப் போதுவீர்" என்பது அடியவரை கைங்கர்யம் செய்ய அழைப்பதை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது.
2. மதி நிறைந்த - அந்த வேண்டுகோளை கேட்ட மாத்திரத்தில், கோபியரின் முகங்களும் பவுர்ணமி நிலவை ஒத்த பிரகாசம் அடைவதாகவும் வைத்துக் கொள்ளலாம் ! வெண்ணிலவு, வானத்தில் மட்டுமே இல்லை :)
3. 'செல்வ சிறுமீர்காள்' என்பதில் உள்ள 'செல்வம்' என்ற பதம் கண்ணன் மேல் உள்ள பேரன்பையும், அவனது துணை தரும் மகிழ்ச்சியையும் உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது.
4. இப்பாசுரத்தில், 'ஆய்ப்பாடி' என்பது சம்சார சாகரத்தை உள்ளர்த்தமாக குறிக்கிறது.
5. "நேரிழையீர்" என்ற பதம் அமைதியையும், புலனடக்கத்தையும் ஒரு சேர வாய்க்கப் பெற்ற மாந்தரைக் குறிக்கிறது.
6. கூர்வேல் கொடுந்தொழிலன் -- தன்னுடைய சங்கல்பத்தால், நமது பாவங்களுக்கு நிவர்த்தி தர வல்லவன் கிருஷ்ணன் என்பதை உள்ளர்த்தமாக உணர்த்துகிறது.
7. கதிர் மதியம் போல் முகத்தான் -- பரந்தாமன் ஒரே சமயத்தில், அடியார்களுக்கு அருளையும் (குளிர்ச்சி), பகைவர்க்குத் துன்பமும் (வெப்பம்) தர வல்லவன் என்பதால் !
8. பறை தருவான் -- "மோட்ச சித்தியை அடைவதற்கான உபாயங்களை அருள்வான்" என்பது உட்பொருள்.
9. "நாராயணனே" என்பது உபய ஸ்வரூபத்தையும், "நமக்கே" என்பது அதிகாரி ஸ்வரூபத்தையும் குறிப்பில் உணர்த்துகிறது. இந்த இரண்டு சொற்களிலும் காணப்படும் ஏகாரம், பரமனை விட்டால் நமக்கு வேறு கதியில்லை என்பதை அறுதியிட்டு உணர்த்துகிறது இல்லையா ?
10. மேலும், கர்ம/ஞான யோகங்களை விடவும், பக்தி யோகமே பரமனின் அருளைப் பெறவும், அவனை அடையவும் சிறந்த மார்க்கமாக, திருப்பாவையின் முதல் பாசுரம் அறிவிக்கிறது.
என்றென்றும் அன்புடன்
பாலா
18 மறுமொழிகள்:
Test !
400 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் பாலா.
ஐயா,
//// 'மாரி' என்ற வார்த்தையிலிருந்து உண்டானது 'மார்' என்பது. 'மாரி' என்றால் மழை என்று பொருள். 'கழி' என்றால் 'கழிந்த' அல்லது 'பின்னர்' என்று அர்த்தம். எனவே, மழைகாலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள். ///
தமிழ்மாதங்களின் பெயர்கள் பெரும்பாலும் அந்த மாதத்தின் பௌர்ணமி நட்சத்திரை ஒட்டித்தான் இருக்கும். ஒவ்வொரு மாதத்தின் பௌர்ணமியும் அந்த மாதத்தின் பெரிய பண்டிகை ஆகும். தனுர் மாதத்தில் பௌர்ணமி மிருகசீரிஷ நட்சத்திரத்தில் வருவதால் இந்த பெயர். இந்த நட்சத்திரத்தை மகீரன் என்றும் சொல்லுவார்கள். விசாகம் வைகாசியானதுபோல மகீரன் மார்கழி ஆனது. இதுவே என் புரிதல்.
நன்றி
ஜயராமன்
Bala
Read :)
மதுமிதா, சங்கர்,
மிக்க நன்றி.
ஜயராமன்,
உங்கள் விளக்கத்திற்கு நன்றி. நான் கேள்விப்பட்டதில்லை, விசாரிக்கிறேன்.
எ.அ.பாலா
பாலா
மாரி கழிந்து வரும் மாதம் மார்கழி-ன்னு உங்கள் விளக்கம் மிக நன்று!
ஏற்புடையதாகவும் இருக்கு!
மாசானாம் மார்க்கசீருஷம்-னு கீதையில் சொல்லுற மார்க்கசீருஷ மாதம் தான் தமிழில் மார்கழி!
ஜயராமன் ஐயா சொல்வது வடமொழிப் பெயருக்குச் சரியான விளக்கமே! சாந்திரமான பஞ்சாங்கத்தின் படி, அந்தந்த மாதப் பெளர்ணமி எந்த நட்சத்திரத்தில் வருதோ, அதுவே மாதத்தின் பெயராகவும் அமைந்து விடும்.
எ.கா
சித்திரை = சித்ரா நட்சத்திரம்
வைகாசி = விசாக நட்சத்திரம்
ஆனி = ஜ்யேஷ்டா நட்சத்திரம்
ஆடி = ஆஷாட நட்சத்திரங்கள்
ஆவணி = ஸ்ரவண நட்சத்திரம்
அந்த வரிசையில்
மார்கழி = மார்க்கசீருஷ நட்சத்திரம்
சைத்ரம், விசாகம், ஜ்யேஷ்டம், ஆஷாடம்-னு மாதங்களை அவங்க சொல்லிப்பாங்க!
ஆனாத் தமிழில் சித்திரை, வைகாசி, ஆனி என்று தமிழ்ப் பெயர்கள் தான்!
மார்கழியும் அழகிய தமிழ்ப் பெயரே!
பாசுர விளக்கம் அருமை!
நாலு செஞ்சுரி அடிச்ச பாலாவுக்கு ஒரு ஓஓஓஓஓஓ போடுங்கப்பா! :-)
வாங்க கண்ணபிரான்,
//மாரி கழிந்து வரும் மாதம் மார்கழி-ன்னு உங்கள் விளக்கம் மிக நன்று!
ஏற்புடையதாகவும் இருக்கு!
//
தங்களுக்கு ஏற்புடையது இல்லாக் கருத்தை வலையேற்ற எங்ஙனம் அடியேனுக்கு தைரியம் வரும் ? ;-)
பெரியோர் சொன்னவற்றிலிருந்து நான் புரிந்து கொண்டதை சரி பார்த்துக் கொள்ளவே அவற்றை தங்களைப் போன்ற ஆன்மீகச் செம்மல்கள் முன் வைக்கிறேன், அவ்வளவு தான் மேட்டர் :)
பௌர்ணமி நட்சத்திரமே மாதத்தின் பெயராக உருமாறுவது பற்றி தாங்கள் கூறுவதும் அடியேனுக்கு ஏற்புடையதே !!!
நன்றி.
எ.அ.பாலா
//
நாலு செஞ்சுரி அடிச்ச பாலாவுக்கு ஒரு ஓஓஓஓஓஓ போடுங்கப்பா! :-)
//
Only YOU and Madhumithaa did that :))))
First "O"
This is one of favourite . when I was a kid, I recite this evry day in this month. I never new that Tamil Months are named after the stars........Thanks for enriching the knowledge.
-- CT
CT,
Welcome ! Long time, I guess :) Hope everything is fine at your end.
Pl. read my "thamizmaNam star" postings pointed by the LINK above the CLOCK in my homepage !
நானூறாவது இடுகைக்கு வாழ்த்துகள் பாலா. நானூறாவது இடுகையாகத் திருப்பாவை அமைந்தது அருமை.
மழைக்காலம் முடிந்த பின்னர் வரும் மாதம் என்பது மார்கழிக்கான விளக்கம் என்று இன்று தான் அறிந்தேன்.
வழக்கமாக கோகுலத்தில் கொண்டாடப்பட்ட காத்யாயினி விரதத்தையே பாவை நோன்பு என்று சொல்வது வழக்கம். ஆனால் பழந்தமிழ்நாட்டிலும் பாவை நோன்பு கொண்டாடப்பட்டிருக்கிறது. அது கோகுல வழக்கமாக இருக்கலாம்; தமிழகத்தின் தொன்று தொட்ட வழக்கமாக இருக்கலாம்.
நாராயணனே நமக்கே என்பதில் உள்ள உபாய ஸ்வரூபத்தையும் அதிகாரி ஸ்வரூபத்தையும் பற்றி இன்னும் அதிகமாக விளக்கியிருக்கலாமே.
Test !
400 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் பாலா..
உங்களுடைய திருப்பாவை பதிவுகளை எதிர்பார்த்திருந்தேன்.. ஆரம்பித்து விட்டீர்கள்..
பன்னிரு ஆழ்வாரில் பாங்கான கோதையின் திருப்பாவைக்கு உங்கள் விளக்கம் அறிய காத்திருக்கிறேன்.
Raghav,
நீங்கள் எதிர்பார்த்தது போலவே திருப்பாவைப் பதிவுகளை தொடங்கி விட்டேன். :)
நன்றி.
//மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான்//
//மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான்//
என்ன அழகான கவிதை! ஆன்மீகமாய் இல்லாவிட்டாலும் அற்புதமான சொற்கோவைகள்
கவிதையின் வரி அமைந்திருப்பதைப்போலவே பொருள் கூறினாள் என்ன?
நன்றி
நன்றி முபாரக் !
Post a Comment